ஜே.பி. நட்டாவின் சொந்த மாநிலத்தில் பா.ஜனதாவால் வெற்றி பெறமுடியவில்லை: சரத்பவார்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் ஜே.பி. நட்டா அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்று சரத்பவார் கூறினார்.

பா.ஜனதா கட்சி 2024-ம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை அந்த கட்சி நிர்ணயித்து உள்ளது. இதனை “மிஷன் 45” என்று மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா குறிப்பிட்டார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதனால் பா.ஜனதா “மிஷன் 48″ என்று தான் தொடங்கி இருக்க வேண்டும். 45 அல்ல. ஜே.பி. நட்டா அந்த கட்சியின் தலைவர். அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. எனவே பா.ஜனதா தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.

மேலும் ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக சட்டம் இயற்ற கோரி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் முடிவெடுக்கலாம். யார் எதிர்ப்பு தெரிவித்தனர்?” என்றார்.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் சமீபத்தில் சட்டசபையில் பேசியபோது, சம்பாஜி மகாராஜாவை மதப்பாதுகாவலர் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டும் இன்றி அஜித் பவார், சம்பாஜி மகாராஜாவை அவமதித்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், “சுயராஜ்யத்தின் பாதுகாவலராக சத்ரபதி சாம்பாஜியை சமுதாயத்தில் சிலர் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதேபோல ஒரு சிலர் அவரை மத பாதுகாவலர் என அழைத்து அவரது பணிகளை மத கோணத்தில் பார்த்தாலும் அதிலும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் அவருக்கு தர்ம ரட்ஷகர் அல்லது தர்மவீரர் என்று அடைமொழியை பயன்படுத்தாதது குறித்து சிலர் புகார் கூறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை விவாதிக்க எந்த காரணமும் அல்ல” என்றார்.