பொங்கல் திருநாளாம் ஜனவரி 15ஆம் தேதி நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. போர்க்குரல் உயர்த்தியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 14, 15, 16, ஆகிய 3 தேதிகளிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடத்துவது என்பது அந்த தேர்வில் தமிழர்கள் அதிகளவு கலந்துகொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழர்கள் ரயில்வே தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக இளைஞர்கள் ஏராளமானோர் வங்கிப் பணிகளில் சேர ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொங்கல் அன்று நடத்தப்படும் தேர்வானது அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனிடையே சு.வெங்கடேசன் எம்.பி. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி தேர்வு தேதியை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.