ஆளுநர் தேசிய கீதத்தை எப்போ மாத்துவார்?: கி.வீரமணி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் என்று கூறி பிரிவினையை வளர்க்கிறார்கள் எனப் பேசிய நிலையில், “தேசிய கீதத்தில் “திராவிட உத்கல வங்கா” என்ற வார்த்தை பிரிவினை வாதமா? ஆளுநர் தேசிய கீதத்தை எப்போது மாற்றப்போகிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தமிழ்நாடு என்று கூறுவதைவிட தமிழகம் என்று கூறுவதே சரியானது என்றும், திராவிடம் எனக் கூறி பிரிவினையை வளர்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஆளுநர் ரவி, தெரிவித்த இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், திமுகவினர் பலரும் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “தேசிய கீதத்தில் “திராவிட உத்கல வங்கா” என்ற வார்த்தை பிரிவினை வாதமா? திராவிடம் என்பதைப் பற்றி ஆளுநருக்கு அறவே தெரியவில்லை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை பேசிக்கொண்டு இருந்தார் என நினைத்தோம், ஆனால் அவர் உளறுகிறார், பிதற்றுகிறார் என்பது தற்போதுதான் தெரிகிறது. ஆளுநர் தேசிய கீதத்தை எப்போது மாற்றப்போகிறார்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.