என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள், வருவாய்த்துறை மற்றும் என்எல்சி இந்தியா நிறுவன அதிகாரிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, கங்கைகொண்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும், கூட்டத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வந்திருந்தனர். ஆனால், அவர்களை மண்டபத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் கால் மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
என்எல்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளை கூட்டத்தில் அனுமதிக்காததைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளிநடப்பு செய்தார். புவனகிரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அ.அருண்மொழி தேவன் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்ற கருத்தை பதிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.