மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவர்களை கௌரவிக்கும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பாஜக அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் ராகுலின் நடைப்பயணம் உள்ளது.

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடைபெற்று அதில் வெற்றி பெற்றதை நினைவுகூரும் விதமாக மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அதற்கு அனுமதி கோரியுள்ளோம். விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.