பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின் குடிநீர்த்தொட்டியில் மனித மலத்தை சாதிவெறியர்கள் கலந்த கொடுஞ்செயல் தொடர்பான செய்தி வெளியாகி, ஒரு வாரத்தைக் கடந்தும் இன்று வரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யாதிருக்கும் திமுக அரசின் செயல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. சமூக நீதி ஆட்சியென நாள்தோறும் சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, தமிழ்நாட்டையே உலுக்கிய இக்கோரச்சம்பவத்தில் தொடர்புடைய சாதிவெறியர்களைக் கைது செய்யாது மெத்தெனப் போக்கோடு நடந்துகொள்வது கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் சாதி ஒழிப்பா? எல்லோருக்குமான ஆட்சி என தற்பெருமை பேசும் திமுக அரசு, இக்கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையோ, நியாயத்தையோ பெற்றுத்தராமல், குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றத் துணைபோவது வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமாகும். நாடறியப்பட்ட ஒரு கொடுங்கோல் சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீதே கைது நடவடிக்கையை மேற்கொள்ள திமுக அரசு தயங்குகிறதென்றால், எவ்வளவு பெரிய மோசடித்தனம் இது? இதுதான் பெரியார் வழியிலான விடியல் ஆட்சியா? இதுதான் சமத்துவத்தை நிலைநாட்டும் லட்சணமா? இதுதான் திமுகவின் சாதி ஒழிப்புச் செயல்பாடா? அக்கொடும் நிகழ்வு நடைபெற்று ஒரு வாரமாகியும்கூட ஒரு அமைச்சர்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், துணைநிற்கவும் அக்கிராமத்திற்குச் செல்லாதது ஏன்? இதுதான் சமூக நீதியைப் பேணிக்காக்கும் அரும்பணியா?
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம், கிளாமங்கலத்தில் இரட்டைக்குவளை முறையைப் பின்பற்றி, தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்களும் கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் திமுக அரசின் பொறுப்பற்றத்தனத்தையும், சாதிய மேலாதிக்கத்துக்குத் துணைபோகும் சந்தர்ப்பவாத அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழுள்ள ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதும், அவர்களுக்கான நலத்திட்டங்கள் சரிவர சென்று சேரவில்லையென்பதும், ஆதிக்குடி, பழங்குடி மாணவர்களுக்கான கல்வி மேம்பாடு தொடர்பான 33 திட்டங்களில் 13 திட்டங்களுக்கு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும் பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது.
இதுமட்டுமல்லாது, மாநில மனித உரிமை ஆணையத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் ஒருவர்கூட பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் இல்லையென்பதும் திமுக அரசின் ஆதிக்குடிகளுக்கு எதிரான வஞ்சகப்போக்கையே காட்டுகிறது. மேலும், சாதிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமியற்றப்பட வேண்டுமெனப் பல காலமாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையையும் இதுவரை திமுக அரசு ஏற்கவில்லை. மனிதக்கழிவை மனிதனே அள்ளும் நிலை ஒழிக்கப்பட வேண்டுமெனக் குரலெழுப்பி வரும் நிலையில், ஆர்.கே.தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆய்வுசெய்யும்போது, அவரது கண்முன்னே துப்புரவுத்தொழிலாளர் பாதுகாப்பு உபகரணங்களோ, கையுறையோ இன்றி, சாக்கடையை அள்ளச் செய்யப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது; மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் முன்பே நடந்த இச்செயலுக்கு, அவர்தான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரை அச்சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
தமிழ்நாட்டைப் பெரியார் மண்ணென்று சொந்தம் கொண்டாடி அரசியல் செய்து வரும் திமுக அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கெதிரான தீண்டாமைக் கொடுமைகளையோ, சாதிய வன்முறைகளையோ தட்டிக்கேட்கத் துப்பற்று வாய்மூடிக்கிடக்கிறது என்பதே புறச்சூழலாகும். விளைவாக, மக்களின் அங்கீகாரம் பெற்று ஊராட்சி மன்றத் தலைவர்களான விளிம்பு நிலை மக்கள் பலர் சுதந்திர நாளன்று கொடியேற்றக்கூட முடியாது போராட வேண்டிய நிலையிருப்பது பெரும் வேதனையாகும். ஆகவே, அடையாள அரசியல் செய்வதையும், காட்சி அரசியல் செய்வதையும் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்வைத்து இனியாவது செயலாற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.