விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மும்பைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் 72 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே ஏர் இந்தியா விமானத்தில் 32 வயது நபர் ஒருவரும் பயணித்தார். விமானத்தில் இரவு நேரத்தில் 72 வயது மூதாட்டி மீது ஏதோ திரவம் விழுந்தது போல் இருந்தது. கண் விழித்து பார்த்த போது ஒரு போதை ஆசாமி அவர் மீது சிறுநீர் கழித்து கொண்டிருந்ததை அறிந்து அதிர்ந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்த விமான பணியாளர்களிடம் கூறினார். அதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்திடமும் கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மூதாட்டி இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் பதிவிடப்பட்டது.
நவம்பர் 26 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு பொதுவெளியில் பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் முதல் காவல் துறை வரை நடவடிக்கை எடுக்கத் தொடங்கின. இது போன்று ஒழுக்கக் கேடான செயலில் ஈடுபட்ட நபர் யார் என்பது தெரியவந்தது. அவர் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (எ) சஞ்சய் மிஸ்ரா என்றும், அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவராக முக்கிய பொறுப்பில் பணிபுரிபவர் என்றும் தெரிய வந்தது. இந்த நிலையில் சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க 30 நாட்களுக்கு தடை விதித்து ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே சங்கர் மிஸ்ரா தனது வழக்கறிஞர்கள் வாயிலாக மூதாட்டியை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். அந்த வகையில் சங்கர் சிறுநீர் கழித்த மூதாட்டியின் ஆடைகள் மற்றும் உடைமைகளை சலவை செய்து தந்தார். மேலும் இழப்பீடாக ஒரு தொகை அளித்தார். ஆனால் மூதாட்டி தரப்பில் சங்கர் மிஸ்ரா அளித்த தொகையை திருப்பி அனுப்பினார்கள். தொடர்ந்து சங்கர் மிஸ்ரா தலைமறைவாக இருந்ததால், அவருக்கு எதிராக டெல்லி போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்தனர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தநிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த சங்கர் மிஸ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது. இவற்றை அடுத்து, விமான பயணத்திற்கான நெறிமுறைகள் மற்றும் விமான சிப்பந்திகள் அப்போது உடன் செயலாற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
சங்கர் மிஸ்ரா மீது 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்), 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல் ஆகியவற்றை அவமதிக்கும் நோக்கில் செய்தல்) இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் 510 (குடிபோதையில் இருக்கும் நபர் பொது இடங்களில் தவறாக நடத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெல்ஸ் பார்கோ இந்தியாவின் துணைத் தலைவர் சங்கர் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘ஆழ்ந்த கவலையளிக்கிறது’ .இந்த நபர் வெல்ஸ் பார்கோவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்தார்.