தொடர்ந்து நிகழும் பயங்கர நிலச்சரிவால் உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரமே புதையும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயாராகி வருகின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலை கிராமமான ஜோஷிமத்தில் இயற்கை நிகழ்த்தி வரும் பயங்கரத்தைதான் இன்று நாடே பாரத்து பயந்து வருகிறது. சுமார் 15ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வசித்து வரும் ஜோஷிமத் கிராமம் மோசமானபுவியியல் அமைப்பில் அமைந்துள்ளது. எனவே இங்கு அடிக்கடி நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுவது சஜகம். இந்நிலையில்தான், யாரும் எதிர்பாராதவகையில் கடந்த சில நாட்களாக ஜோஷிமத் பகுதியில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன. முதலில், இதனை எப்போதும் போல சாதாரண நிலச்சரிவுதான் என்று நினைத்த உத்தரகாண்ட் அரசு, அடுத்தடுத்த நாட்களில்தான் நிலைமையின் விபரதீதத்தை உணர்ந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஜோஷிமத் கிராமத்தில் பல்வேறு பகுதிகள் ஒரே நேரத்தில் பூமிக்குள் புதைந்து வருகின்றன. இன்னும் சிறிதுநாட்களுக்குள் ஒட்டுமொத்த ஜோஷிமத் கிராமமே பூமிக்குள் புதைந்துவிடும் எனவிஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தற்போதைய சூழலில்,570க்கும் அதிகமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், ராணுவத்தினரை கொண்டு மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, தற்போது ஜோஷிமத்தில் உள்ள சாலைகளும் திடீர் திடீரென இரண்டாக பிளந்து பூமிக்குள் செல்ல தொடங்கியுள்ளன. இதனால் எந்நேரமும் ஜோஷிமத் கிராமமே பூமிக்குள் புதைந்துவிடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம், தீயணைப்புப் படை உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, ஜோஷிமத் கிராமத்தில் சாலைகளும் நிலச்சரிவால் விரிசல் விடதொடங்கியுள்ளதால், அங்கு தரை மார்க்கமாக மீட்புப் பணியில் ஈடுபடுவது மேலும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என முதல்வரிடம் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முதல்வரின் உத்தரவு படி, 5 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடவுள்ளன. மேலும், மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை வழங்குவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் உறுதியளித்துள்ளது. இதனிடையே, ஜோஷிமத் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, மருந்துப்பொருட்கள் கிடைக்கவும் ஆயிரக்கணக்கான தற்காலிக முகாம்கள் கிராமத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு வருகின்றன.