17 வயது முதல் 80 வயது கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே கொள்கை பிடிப்புடன் டி.ஆர்.பாலு வாழ்ந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு எழுதிய பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதல் பாகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், இரண்டாம் பாகத்தை வைரமுத்துவும் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் வளர்ச்சிக்காக, திமுகவின் வளர்ச்சிக்காக டி.ஆர்.பாலு ஆற்றிய பணிகள் ஏராளமானவை. இந்த புத்தகத்தை எழுதியதற்காக டி.ஆர்.பாலுவை பாராட்டுகிறேன். ஏனென்றால் ஒரு செயலை செய்வது எவ்வளவு முக்கியமோ, அதனை பதிவு செய்வதும் முக்கியம். பதிவு செய்யவில்லை என்றால், அது காலத்தால் மறக்கப்பட்டுவிடும், மறக்கடிக்கப்பட்டுவிடும். நெருக்கடி காலத்தின் போது சிட்டி பாபு, சிறை டைரி என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம் இல்லையென்றால் நாங்கள் வாங்கிய அடிகள், சிட்டி பாபு செய்த தியாகங்களுக்கு சாட்சியம் இல்லாமல் போயிருக்கும். திமுகவின் முன்னோடிகள் அனைவரும் தங்களது போராட்டங்கள், தியாகங்கள், பணியாற்றிய தோழர்களின் பங்களிப்புகளை தொகுத்து நூலாக வெளியிட வேண்டும். டி.ஆர்.பாலுவின் புத்தகம் அந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஆர்.பாலு வகித்து வரும் பொருளாளர் பொறுப்பு கருணாநிதி, அன்பழகன், எம்ஜிஆர், ஆற்காடு வீராசாமி வரிசையில் நானும் வகித்த பொறுப்பு. டி.ஆர்.பாலுவின் வளர்ச்சிக்கு அவரது உழைப்பு மட்டுமே காரணம். இங்கு உழைக்காமல் யாரும் பொறுப்புகளுக்கு வந்துவிட முடியாது. 17 வயதில் தீவிர அரசியலுக்கு வந்த டி.ஆர். பாலு, 80 வயது கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே கொள்கை என்ற பிடிப்புடன் இருக்கிறார். திமுகவின் வெற்றிக்கு உழைத்த கரங்களில் டி.ஆர்.பாலுவின் கரங்களும் முக்கியமானது.
1970களில் இளைஞராக டி.ஆர்.பாலுவை பார்த்த போது, நாங்கள் இருவரும் ‘போடா வாடா’ என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நட்புடன் பயணித்தோம். முதல்முறையாக இளந்தென்றல் என்ற பட்டத்தை எனக்கு கொடுத்தவர் டி.ஆர்.பாலு தான். அதுதான் என் வாழ்க்கையில் பெற்ற முதல் பட்டம். நான் வீட்டில் இருந்ததைவிட டி.ஆர்.பாலு அலுவலகத்தில் இருந்த நேரம்தான் அதிகம். எனக்கு பேச்சு பயிற்சி களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம் அமைப்பு தான். மிசா காலத்தில் எங்களின் நட்பு இன்னும் நெருக்கமாக மாறியது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போது எப்படி காரை மறித்து சண்டையிட்டாரோ, அதற்கு முன் எனக்காக மிசா காலத்தில் சண்டையிட்டவர் டி.ஆர்.பாலு. நாங்கள் ஒன்றாக திமுக கூட்டத்திற்கு செல்வோம். அப்படி சொல்லும் போது, எனக்கு வழங்கப்படும் வழிச்செலவை அவருக்கு கொடுப்பேன். எங்கேயும் இணை பிரியாமல் இருந்திருக்கிறோம். எங்களின் நட்பு மிசா விடுதலைக்கு பின் அதிகமாகியது. சென்னை மாவட்டச் செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிட்ட போது, நானும் உதவி செய்தேன். அனைத்தையும் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். கருணாநிதிக்கு சிறந்த மணிவிழாவை நடத்தி காட்டியவர். 27 ஆண்டுகளாக நாடாளுமன்ற பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மூன்று முறை மத்திய அமைச்சர் பதவியை வகித்துள்ளார். அவையனைத்திற்கும் டி.ஆர்.பாலுவின் உழைப்பு மட்டுமே காரணம். சிலர் அமைச்சர் பொறுப்பு இல்லையென்றால் சோர்ந்துவிடுவார்கள். ஆனால் டி.ஆர்.பாலு எப்போதும் அமைச்சர் போலவே கம்பீரத்துடன் இருப்பார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவின் குரலாக ஒலித்தவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆயுதமாக நினைத்து டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பினார். இன்று வரை ஆயுதமாகவே செயல்பட்டு வருகிறார். இன்னும் களங்கள் மீதமிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.