ஆசிரியா்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் பணி அல்லாத ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆசிரியா்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாளன்று அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிா்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கான ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை கடந்த அக்டோபா் மாதம் நிலவியது.

இருப்பினும், இந்தச் சிக்கல் சில நாள்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இந்தப் பிரச்னை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், பணியாளா்கள் 3 மாதங்களாக ஊதியம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனா் என்பதும் தற்போது தெரியவருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளார்.