புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கின. இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையின் கந்தர்வக்கோட்டை பகுதிக்குட்பட்ட தச்சங்குறிச்சியில் வழக்கமாக ஜனவரி 2ம் தேதி நடைபெறும். ஆனால் இம்முறை விழா கமிட்டியினர் போட்டிக்கு உரிய அனுமதியை முன்கூட்டியே கோரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும் அனுமதியளிக்கவில்லை. இதனால்தான் போட்டி 2ம் தேதியிலிருந்து 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல்துறை எஸ்.பி வந்திதா பாண்டே மற்றும் வருவாய் அதிகாரிகள் கடந்த 5ம் தேதி பார்வையிட்டனர். இந்த ஆய்வில் நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்படவில்லையென்று கூறி போட்டிக்கான அனுமதியை ஆட்சியர் ரத்து செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் இந்த தடை உத்தரவால் கோபமடைந்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானப்படுத்த காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அப்போது சில விவவரங்களை காவல்துறை அதிகாரிகள் விளக்கி கூறினர். அதாவது, வாடி வாசலிலிருந்து காளைகள் வெளிவரும் கலெக்ஷன் பாயிண்ட் சரியாக அமைக்கப்படவில்லை என்பதையும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்காததையும் சுட்டிக்காட்டினர். மேலும், மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை ஆர்டிபிசிஆர் முறையில் மேற்கொண்டால் மட்டுமே போட்டி நடைபெறும் என்றும் கூறியிருந்தனர். காவல்துறையினரின் இந்த விளக்கத்தை ஏற்காத அவர்கள் கடந்த 5ம் தேதி இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் விழா கமிட்டியினர் ஜல்லிக்கட்டு போட்டியானது ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே 2ம் தேதி நடக்க இருந்த போட்டியானது 6ம் தேதிக்கு தள்ளி போனது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தற்போது போட்டி முழுவதுமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது மக்களிடையே மேலும் கோபத்தை அதிகரித்தது. இதல் தச்சங்குறிச்சியில் பதற்றமான சூழல் நிலவியது. எனவே காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் சுமார் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல காளைகளுக்கான டோக்கன்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன. போட்டியில் நீதிமன்றம் கொடுத்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். ஆண்டின் முதல் போட்டி இது என்பதால் இதனை காண ஏராளமானோர் தச்சங்குறிச்சியில் குவிந்துள்ளனர்.