குளிர் அலை காரணமாக டெல்லியில் வருகிற 15ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் புதிய ஆண்டானது பிறந்ததற்கு பிறகு கடுமையான மூடு பனி மற்றும் குளிர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவை மற்றும் ரயில் சேவை, சாலை போக்குவரத்திலும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லியை பொறுத்தவரை இதற்கு முன்பு குளிர் காரணமாக ஆரஞ்சு மட்டுமல்லாமல் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்தது. இந்த குளிர் காற்று காரணமாக உத்தரப் பிரதேசம் கான்பூரில் 25க்கும் மேற்பட்ட உயிர்பலி ஏற்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்தநிலையில் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதேப் போல், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குளிர்ந்த காற்று மற்றும் மோசமான மூடு பனியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வட மாநிலங்களில் ஜனவரி 10ம் தேதி முதல் குளிர் குறையும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில் குளிர் அலை காரணமாக டெல்லியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 15ம் தேதி வரை மூட, டெல்லி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.9 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 8ம் தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டு, இன்று திறக்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. மேலும் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளும் ஜனவரி 15 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.