தமிழ்நாடு அரசின் உரையை மாற்ற ஆளுநருக்கு உரிமை இல்லை: முத்தரசன்!

தமிழ்நாடு அரசு வழங்கும் அச்சிடப்பட்ட உரை படிப்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடமையே தவிர, அதனை திருத்துவதற்கோ, வாசகங்களை சேர்ப்பதற்கோ உரிமையில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும், போட்டி அரசாங்கத்தையும் நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அணுகி வருகிறது. இதுவொரு அப்பட்டமான ஜனநாயக விரோத, சர்வாதிகார போக்காகும். தமிழ்நாடு அரசு கொடுக்கும் உரையை, படிப்பது மட்டுமே ஆளுநரின் கடமை. அதனை திருத்துவதற்கோ, சேர்ப்பதற்கோ எந்த உரிமையும் கிடையாது. இது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்லாமல், ஆணவப் போக்கு. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் அனைவரும் செயல்பட வேண்டும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, மரபுகளை மீறி அராஜகத்தை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கலகம் உருவாக வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். பாஜகவின், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றவே ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

சட்டசபை என்பது மக்களின் நலன்களுக்காக மசோதாக்களை நிறைவேற்றும் பொறுப்புமிக்க இடம். அங்கு நிறைவேற்றப்படும் மசோதாக்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட 20 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக பதிலளித்தது. ஆனாலும் இன்றுவரை மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை.
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதன் மூலம் தவறு யார் பக்கம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மசோதாக்களை திருப்பியும் அனுப்பாமல், ஆட்சேபமும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டதன் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.