ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதது சர்ச்சையானது.
இந்நிலையில், வருகின்ற ஜனவரி 12-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் இலச்சினையில் ‘தமிழ்நாடு’ என்று எழுதப்பட்டிருப்பதால் மாநில அரசின் இலச்சினையும் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. மாறாக மத்திய அரசின் இலட்சினை மட்டுமே இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழக அரசின் இலச்சினையும், தமிழ்நாடு ஆளுநர் எனவும் அச்சடிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்பிதழை பகிர்ந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலச்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலச்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகையில், அரசால் அச்சடிக்கப்பட்ட ஆளுநர் உரையில் இருந்த திராவிட மாடல், தமிழ்நாடு, சமூகநீதி என்ற வார்த்தைகளையும், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் படிக்காமல் தவிர்த்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு சட்டப்பேரவையிலேயே எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து, தேசியக் கீதம் இசைக்கப்பட்டு முறைப்படி பேரவைக் கூட்டம் முடிவதற்கு முன்னதாக பாதியிலேயே பேரவையிலிருந்து ஆளுநர் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு என்ற வார்த்தை நேற்று ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்குவதற்குள், ஆளுநர் மாளிகையின் பொங்கல் அழைப்பிதழில் தமிழகம் மற்றும் தமிழக அரசின் இலச்சினை இடம்பெறாதது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.