முதலமைச்சரின் மதி நுட்பத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார். முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 9-ந் தேதி உரையாற்றியபோது நடந்த அசாதாரண சூழல் குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று விரிவான விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் உறுப்பினர்கள், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.வேல்முருகன் உள்ளிட்டோர் கவர்னர் உரையின்போது தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர். இது தவிர்த்திருக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் கவர்னர் உரையின்போது நடந்த சம்பவம், உறுப்பினர்கள் உள்ளத்தில் மனதில் இருந்த கருத்துகளை பேசிவிட்டு சென்றார்களே தவிர அசம்பாவிதமோ தவறான நிகழ்வுகளோ நடக்கவில்லை. வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு கோஷமிட்ட உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கையை உள்வாங்கிக் கொண்டு இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும். அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ அரசோ இல்லை. கவர்னர் பேசும்போது அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிட்டது. மக்கள் பிரச்சினையை பேசுவதை அவையில் உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
9-ந் தேதி கவர்னர் உரையின்போது ஏற்பட்ட அசாதாராண சூழலுக்கு அரசோ அவையோ பொறுப்பு அல்ல. கவர்னர் ஒரு சில விஷயங்களை திருத்தியும் புகுத்தியும் பேசியதைத் தொடர்ந்து ஒரு சில சலசலப்பு ஏற்பட்டது. அதனை முதலமைச்சர் கவனித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டி அவை மாண்பை காத்தார். கவர்னர் அசாதாரண சூழலை ஏற்படுத்தினாலும் முதலமைச்சரின் மதி நுட்பத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார்.
கவர்னர் தனது உரையை வாசிப்பதற்கு மட்டுமே உரிமை, கடமையே தவிர, அதில் இருக்கும் உரையை மாற்றுவதற்கு அனுமதி இல்லை. கவர்னர் வாசித்து அளிப்பதோடு முடிந்துவிட்டது அவருடைய கடமை. எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ எந்த கட்சியாக இருந்தாலும் எதிர் கருத்தை சொல்ல வேண்டும் என்றால் அரசை தான் சொல்வார்களே தவிர கவர்னர் செய்தார் என்று இதுவரை கேட்டதும் இல்லை. அப்படி ஒரு மரபும் அல்ல. கவர்னர் என்பவர் நியமிக்கப்பட்ட ஒருவர் தான். முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து சுட்டி காட்டியது இந்த அவைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கவர்னர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், ஒட்டுமொத்த இந்தியாவும் பேசப்படக்கூடிய பொருளாகவும் இருக்கிறது. முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.