அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது. இதில் நேற்று 4-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், அ.தி.மு.க. தொடங்கிய வரலாற்றை குறிப்பிட்டு தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

இன்று 5 வது நாளாக விசாரணையின் போது அதிமுக கட்சி சார்பாக சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடினார்.அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயக அடிப்படையில், பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியைச் செயல்படாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் தற்போது பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது பொதுக்குழு விவகாரத்தில் அனைத்தும் உரிய நடைமுறைப்படி தான் நடைபெற்றது, எனவே அதனை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது என வாதாடினார்

பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரிலே அவர் நீக்கப்பட்டார் என கட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.வில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே இ.பி.எஸ் தரப்பு தான். அவ்வாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கட்சியில் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் அந்த இரண்டு பதவிகளையும் நீக்க வேண்டும் என்று சொல்வதும் இபிஎஸ் தரப்புதான் எனக் குற்றம்சாட்டினார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளும் காலாவதியாகும்போது அடுத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஏற்கனவே நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும். மேலும், தேர்தல் நடத்தப்பட்டு தான் இரு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் விதிமுறை” என்று ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

“அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருந்தது. ஆனால் அப்போது தேர்தலில் மற்ற எவரும் போட்டியிடவில்லை என்பதால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஜூலை11 பொதுக்குழு முடிவுகளை எப்படி எதிர்க்க முடியும் என இவர்கள் கேட்கிறார்கள். அந்த விவகாரம் அனைத்தும் காலாவதியாகிவிட்டது என இ.பி.எஸ் தரப்பு சொல்கிறார்கள் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதிலிருந்து தான் அனைத்து பிரச்சினைகளும் தொடங்கியது. பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீசை முன்கூட்டியே வழங்கவில்லை. வழங்கப்பட்ட நோட்டீசிலும் இடம்பெறாத விஷயங்களை எல்லாம் அ.தி.மு.க பொதுகுழுவில் இவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு நோட்டீஸ்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும். ஜூலை 11 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதம். அடிப்படை உறுப்பினர்களால் தான் உயர்மட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை எக்காலத்திலும் மாற்ற முடியாத விதிமுறை” என ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு சில கேள்விகளை எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு பதவியில் இருப்பவருக்கு அந்த பதவியில் தொடர விருப்பமில்லை அல்லது அவர் அந்த பதவியில் தொடர்வதால் கட்சிக்கு பாதகம் ஏற்படுகிறது, அல்லது அந்த பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என்ற நிலை உருவாகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள் ?

ஓ.பி.எஸ் தரப்பு பதில்: அப்படி நிலை உருவானால் இரு பதவிகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நீதிபதிகள் கேள்வி: தொடர்ந்து உங்கள் கட்சி விவகாரம் நீதிமன்றங்களிலேயே இருந்தால் கட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்? 23 .6 .2022 கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானதுதானா?

ஓ.பி.எஸ் தரப்பு பதில்: கூட்டப்பட்ட கூட்டம் ஒரு அளவுக்கு சரியானது தான் என்றாலும் கூட, அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கையாளப்பட்ட வழிமுறைகள் என அனைத்தும் தவறானது.

நீதிபதிகள் கேள்வி: அப்படி என்றால் அதிலிருந்து தான் அனைத்து பிரச்சனைகளும் தொடங்கியதா?

ஓ.பி.எஸ் தரப்பு பதில்: ஆம்

நீதிபதிகள் கேள்வி: 23-6-2021 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானதுதான் என்று நீங்கள் கூறினால், அன்றைய தினம் அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு தேதி குறிப்பிட்டதும் சரியானதுதானே? இப்படி இன்று பரபரப்பாக வாதங்கள் சென்றது. பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் 16 ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு 16 ந்தேதிக்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.