அமைச்சர் கே.என்.நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சிறுபான்மை பிரிவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியினர், மாநில துணை தலைவர் பாஷா தலைமையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபான்மை பிரிவை சேர்ந்த திருச்சி 54 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜை பொது இடத்தில் வைத்து அடித்து திமுக அமைச்சர் கே.என்.நேரு அவமானப்படுத்தி உள்ளார். இதனை பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அமைச்சர் கே.என்.நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாநில துணை தலைவர் பாஷா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தமிழ்நாடு பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா அறிவுறுத்தலின்படி இன்று புகார் மனு அளித்துள்ளோம். அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் உள்பட தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார். இதனைக் கண்டித்து நாளைய தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில தலைவர் டெய்சி தங்கையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரை கோபமாக தலையில் தாக்கிய ‘வீடியோ’ நேற்று (ஜனவரி 10) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி பெரிய மிளகுபாறையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். அப்போது பெண்கள் தண்ணீர் பிடிக்க முயன்றபோது தண்ணீர் பிடித்து கொடுக்க முயன்ற திருச்சி மாநகராட்சியின் 54ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் புஷ்பராஜை, அமைச்சர் நேரு தலையில் கோபமாக ஓங்கி அடித்தார். இதை பார்த்து சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.