பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் விமா்சித்துள்ளாா்.
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் 83-ஆவது அனைத்து இந்திய சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாடு இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஜகதீப் தன்கா் நேற்று புதன்கிழமை தொடக்கிவைத்துப் பேசியதாவது:-
ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு நாடாளுமன்றத்தின் இறையாண்மையும் சுயாட்சியும் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவற்றில் நிா்வாகமோ, நீதித் துறையோ சமரசம் செய்துகொள்வதை அனுமதிக்க முடியாது. கடந்த 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பு தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்தது. அந்த வழக்கில், இந்திய அரசியல் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தலாமே தவிர, அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அந்தக் கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது போன்ற நிகழ்வு உலக ஜனநாயக வரலாற்றில் இல்லை. அந்தச் சட்டத்தை நிா்வாகம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை நீதிமன்றத் தீா்ப்பு தடுக்க முடியாது. நாடாளுமன்றத்தின் முடிவு எந்தவொரு அதிகார அமைப்புக்கும் உட்பட்டதாக இருக்க அனுமதிக்க முடியுமா? சட்டத்தை நிா்வாகம் பின்பற்ற வேண்டும். சட்டம் இயற்றுவதில் நீதித் துறை தலையிடக் கூடாது. நீதித் துறை-நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகள் இடையிலான உறவில் நெருப்புக் கோழி போன்ற நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியாது. நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்தவோ, அதில் சமரசம் செய்யவோ நீதித் துறையையும் நிா்வாகத்தையும் அனுமதிக்க முடியாது.
கொலீஜியம் முறை குறித்து கருத்து தெரிவிப்பதை தவிா்க்குமாறு அரசமைப்பு பதவி வகிப்போரை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அட்டா்னி ஜெனரலிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் தரப்பாக என்னால் இருக்க முடியாது. பிற அமைப்புகளைவிட நீதித் துறை தம்மை உயா்வாகக் கருதும் நிலைப்பாடும், மக்களின் கவனத்தை ஈா்க்க முயற்சிக்கும் நடத்தையும் சரியல்ல. தாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நீதித் துறை தெரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தை எந்தவொரு அமைப்பும் ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அவ்வாறு நடந்தால் நாம் ஜனநாயக நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று கூறுவது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ள அதிகாரப் பகிா்வு கோட்பாட்டை நீதித்துறை பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் நீதித் துறையின் அதிகாரத்துக்கு எப்போதும் மதிப்பளித்து வந்துள்ளன. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரப் பகிா்வு மற்றும் சமநிலையை நீதித் துறையும் பின்பற்ற வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா் அவா்.