மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா?: குஷ்பு

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். சட்டசபையில் இருந்து கவர்னர் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநர் அரசியல் சாசன மாண்புகளை மீறும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், ஆளுநர் விதியை மீறும் வகையில் செயல்படவில்லை என தமிழக பாஜக கூறி வருகிறது. இதனிடையே ஆளுநர் வெளிநடப்பு செய்த போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரை நோக்கி ஆவேசமாக கையை அசைத்தபடி சொல்வது போன்ற வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார். தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை. ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம்.. ஈசாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது முறையாக விசாரணை நடைபெற வேண்டும்.

சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா?. நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து அது குறித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.