நடிகர்கள் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்: சீமான்

நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடும் போது ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் திரை மயக்கத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டசபை உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்று, இறுதியில் இருமனதாக நிறைவேறியது. 150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதை பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி கலைவிழா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறியதாவது:-

சேது சமுத்திரம் திட்டத்தை அதிகாரத்தில் இருந்த போதே கொண்டு வர முடியவில்லை. அவ்வளவு இடைவு ஏற்பட்டது. தற்போது பாஜகவிடம் அதிகாரம் இருக்கிறது. அதனால் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த விடுவார்களா என்பது தெரியவில்லை. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். செவிலியர்கள் போராட்டமும், கோரிக்கைகளும் நியாயமானது. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பணி வழங்கும் போது, நிரந்தர பணியாளர்களாக மாற்றுவோம் என்று கூறியே பணிக்கு எடுத்தார்கள். இந்த துறைகளில் மட்டுமல்ல, மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பலரும் ஒப்பந்த பணியாளர்களாக எடுத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

வாரிசு மற்றும் துணிவு இரு படங்களும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான சந்தைப்படுத்தலை செய்தால் மட்டுமே, பணத்தை எடுக்க முடியும். ஆனால் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் அதிக நாட்டம் கொண்ட மக்களை, போராட்டத்திற்கு தயார் செய்ய முடியாது. கேரளா, ஆந்திராவில் கூட இவ்வளவு கொண்டாட மாட்டார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியுள்ளது. ரசிகர்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும். இளைஞர்கள் திரை மயக்கத்தில் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்பதில் தவறில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் மீண்டும் வேறு வடிவில் பரவுகிறது. ஏனென்றால் பெரியளவில் மக்கள் கூடுவார்கள். மற்றபடி திருநீர், குங்குமம் பூசக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பற்றி பெரிதாக கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி எதனை சரியாக பேசியுள்ளார். சனாதன தர்மத்தை எதிர்த்த முதல் வேதம் தமிழ் தான். சனாதனத்தை கொண்டு வந்தது ஆரியர்கள் தான். ஆளுநர் அவரின் விருப்பம் போல் இயங்கி வருகிறார். ஆளுநரின் செயல்பாடுகளை பாஜக ரசித்து வருகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது மட்டுமல்ல, பதவியையே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.