கல்லூரி இல்லாத தொகுதிகளில் புதிதாக அரசு கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்முடி

தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது செங்கம் தொகுதியில் புதிதாக அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 8 தொகுதி இருக்கிறது 8 அரசு கல்லூரிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். 3 கல்லூரிகள் ஏற்கனவே இருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தான் கல்லூரிகள் புதிதாகத் அமைக்கப்படும் என்றார்” எனத் தெரிவித்தார்.

அதற்கு எம்.எல்.ஏ மு.பெ.கிரி, திருவண்ணாமலை மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம், பிற தொகுதியைப் போல் பார்க்காமல் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் கல்லூரி அமைக்க அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, எந்தத் தொகுதியில் அரசு கல்லூரி இல்லையோ அந்த தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் அரசின் நிதிநிலையை அறிந்துகொண்டு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, “சுயநிதி கல்லூரிகளை விட அரசுக் கல்லூரிகளில் சேரவே மாணவர்கள் விருப்பம் காட்டுகின்றனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கலைக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக 20% இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. செங்கம் தொகுதியில் புதிய அரசுக் கல்லூரி அமைப்பது தொடர்பாக வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.