சீனாவில் கொரோனாவால் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல்!

உலக அளவில் குறிப்பாக சீனாவில் கொரோனாவின் புதிய மாறுபாடு காரணமாக பாதிப்பு அதிகரித்து மக்கள் கடும் இன்னலை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா அதற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் தனது கிளைகளை விரித்து சமூக பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் சுமார் மூன்று ஆண்டுகள் கொரோனாவால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக இருந்தது. இதைனையடுத்து கொரோனா தடுப்பூசி திட்டமானது இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தீவிரபடுத்தப்பட்டு மருத்துவ வசதிகள் மற்றும் அரசுகளின் தீவிர முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. சில காலம் அமைதியாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது அடுத்தடுத்து உருமாறி மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவின் புதிய வேரியண்ட் ஆன கொரோனா பிஎப் 7 காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. குறிப்பாக சீனா, அமெரிக்கா , ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலிம் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் சீனாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பிஎப் 7 இதற்கு கொரோனாவின் பிஎப் 7 தான் காரணம் என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் கோடிக்கணக்கானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் சாலைகளில் கிடப்பதாகவும் தடுப்பூசி ஊழல் காரணமாக பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அடுத்தடுத்து அடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதே நேரத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. சீனாவின் பாதிப்பு நிலவரங்கள் உடனடியாக கிடைத்தாலும் அந்நாடு பாதிப்புகளையும் இறப்புகளையும் மிகவும் குறைவாகவே பதிவு செய்கிறது எனவும் தற்போது அந்நாடு தரும் தகவல்கள் பாதிப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் இல்லை என கூறுகிறது. தற்போதைய சூழ்நிலையில் சீனாவில் மட்டும் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு பேர் மரணம் அடைவதாகவும் ஆனால் கொரோனா தொடர்பாக அந்நாடு தரும் எண்ணிக்கையும் உண்மை நிலவரமும் வேறுவேறாக இருப்பதாக who குற்றம் சாட்டி இருக்கிறது.

மேலும் கொரோனா காரணமாக சீனாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கிராமப்புறங்களில் படுமோசமாக கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் போதிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்காததாலும் கிராமப்புற மருத்துவமனைகள் மூடப்பட்டு இருக்கின்றன. நகரங்களில் அதிக அளவு நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் முதியவர்கள் சிகிச்சை கிடைக்காமல் மன அழுத்தம் அடைந்து அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ள நிலையில் சீனாவின் உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்து உலகளாவிய விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.