ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னப் பிளவு, உதடு பிளவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைந்து காதலர்களுக்கு பரிசளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரையும் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் உள்ளது. நேற்று 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. புதிய ஒமைக்ரான் உருமாற்றம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவி உள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் பரவமால் தடுக்க கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100 சதவீதம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். மற்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தன்மை குறைந்து தான் உள்ளது. முக கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. முக கவசம் அணிவது நல்லது. கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதா? என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிந்த பிறகே அது பற்றி கூற முடியும். அது ஒருபுறம் இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பை வெகுவாக தடுக்க முடியும். தினமும் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.