ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. அ.தி.மு.க. விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவசிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”நான் சர்வாதிகாரி அல்ல. கட்சி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”, என்று கூறி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து குறித்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

சசிகலா சொல்வதையே, ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். முதலில் அவர்கள் 2 பேரும் ஒன்றுபடட்டும். அவர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். சொந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கே கிணற்றில் உள்ள தண்ணீரை விடாமல், தனது வயலுக்கு பாய்ச்சியவர் அவர். இந்த விஷயமெல்லாம் தெரியுமா? உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. எனவே அவரது கருத்தையெல்லாம் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ‘நானும் இருக்கிறேன்’, என்று காட்டிக்கொள்வதற்காக எதையாவது செய்தும், பேசியும் கொண்டிருப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் வேலை. எனவே ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஒன்றுபடட்டும். அப்போதுதான் அவர்களுக்கு வாழ்வு. அவர்களால் அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்வு ஏற்படப்போவது கிடையாது.

அதேபோல, ‘எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை’ என்ற ரீதியில் சசிகலா பேசியுள்ளார். அவர் ஆயிரம் கருத்து சொல்லலாம். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் பயணிக்கிறது. சசிகலா யார், இதுபோன்ற கருத்தை சொல்வதற்கு? ஒருங்கிணைக்கும் வேலை செய்யப்போவதாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரனை ஒருங்கிணைத்து ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கட்டும். அது நல்ல விஷயம் தான். நாங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை. அதேவேளை எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.