சேகுவேரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து இருப்பார், சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார், ஈழ விடுதலையை ஆதரித்துக் குரல் கொடுத்திருப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா சென்னை வந்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது:-
எண்ணமெல்லாம் புரட்சி என்று சிந்திக்கும் வரம்பு கடந்த சிந்தனையாளர்தான் சேகுவேரா. இனம், மதம், மொழி கடந்து இளம் தலைமுறையினர், புரட்சிகர சக்திகளால், இடதுசாரி அமைப்புகளால் நேசிக்கப்படுபவர் அவர். அவர் மகள் இங்கு வந்திருப்பது அவரே வந்தது போல உள்ளது. என் நாட்டுக்கு மட்டும் போராடுவேன் என்று சேகுவேரா நினைத்து இருந்தால் இங்கு அவரைப் பற்றி பேசி கொண்டு இருக்க மாட்டோம்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர், சராசரி மருத்துவனாக என் வாழ்வை முடித்துக் கொள்ள மாட்டேன் என்று சிந்தித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கியூபா மக்களுக்கு என்றும் துணை நிற்கும்.
சேகுவேரா இன்று இருந்திருந்தால் ஈழ விடுதலையை ஆதரித்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார். சேகுவேராவின் மகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். சேவின் அதே சிந்தனையை உள்வாங்கி புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் செயல்பட்டு வருகிறார் அலெய்டா. ஆதிக்கம் ஒடுக்குமுறை எங்கு இருந்தாலும் ஏகாதிபத்தியம் தான். ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையும் ஏகாதிபத்தியம் தான் அதனை எதிர்த்து போராடுவதும் ஏகாதிபத்திய புரட்சி தான். இவ்வாறு அவர் பேசினார்.