ஈரோடு கிழக்கு தொகுதி: ஜிகேவாசனுடன், அதிமுக தலைவர்கள் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தமாக போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில் ஜிகே வாசனுடன், அதிமுக மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் இந்த தொகுதி ஜிகேவாசனின் தமிழ் மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு தமாக சார்பில் யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்எல்ஏவானார். யுவராஜா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருமகன் ஈவெரா எம்எல்ஏ கடந்த 4ம் தேதி திடீரென மரணமடைந்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியான நிலையில் அதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விபரங்கள் வழங்கினார். மேலும் அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 27 ல் சட்டசபை தேர்தல் அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் தமாக வேட்பாளர் யுவராஜா 58,396 ஓட்டுக்கள் பெற்றார். சுமார் 8,904 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசப்பட்டது. இருப்பினும் அந்த தேர்தலில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது இரட்டை இலை சின்னம் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் தான் தாமாகவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேவேளையில் அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடமாட்டார் என்றும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக அல்லது தமாகா இருகட்சிகளில் எது போட்டியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் தமாக தலைவர் ஜிகே வாசனை, அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான டி ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது பற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் அதில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஜிகே வாசன் கூறுகையில், ‛‛தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைதேர்தல் முக்கியமானது. அதிமுக பாஜக தமாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு வருகிறது. எடப்பாடிபழனிச்சாமியிடம் ஏற்கனவே நான் ஆலோசனை மேற்கொண்டேன். அதிமுக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். எங்களின் இலக்கு உறுதியாக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக, தமாகா, பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வில்லை. வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கூட்டணியில் யார் வேட்பாளர் என்று ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.