ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு திமுக போட்டியிடுமா அல்லது மீண்டும் காங்கிரஸ் கட்சியே களம் காணுமா என விவாதங்கள் நடந்து வந்தன. இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அது காங்கிரஸ் வென்ற தொகுதி என்று குறிப்பிட்ட அவர் திமுக, மதிமுக, முஸ்லீம் லீக், விசிக, உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் யாரை வேட்பாளராக களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.