தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ஐ.நா. மிகுந்த கவனக்குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து தலிபான் ஆட்சியாளர்களை சந்தித்து, ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனங்களைப் பதிவு செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் அமினா மொஹம்மது தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த வாரம் காபூல் மற்றும் கந்தகார் சென்றிருந்தனர். ஆப்கானிஸ்தானின் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்த அவர்கள், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதன் அபாயங்களை எடுத்துரைத்திருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சிலர், தலிபான் கொடிக்கு முன்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தது பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கவே கூடாது. மிகுந்த கவனக்குறைவாக இருந்தது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இது தவறானது, இதற்காக மன்னிப்புக் கோருகிறோம். இது குறித்து அந்த அதிகாரிகளின் மேற்பார்வையாளர், இது பற்றி அவர்களிடம் பேசியிருப்பதாகவும் தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.