முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு!

கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தலைமை நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தநிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சந்தித்து, வாழ்த்து பெற்றார். அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, நாசே.ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டு, தேர்தல் பிரசாரத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டோம். அவரும் வருவதாக சொன்னார். வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே கை சின்னத்துக்கு, தி.மு.க. அமைச்சர்களான கே.என்.நேரு, முத்துசாமி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு சேகரித்ததற்காக நன்றி. கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உடன் ஆதரவு கேட்க இருக்கிறோம். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடமும் பேசி இருக்கிறோம். எல்லா கட்சியை சார்ந்தவர்களையும் நாங்கள் சந்தித்து ஆதரவு கேட்போம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் காவலராக இருக்கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவருடைய நல்லாட்சிக்காக கை சின்னத்துக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

கட்சியின் மேலிடம் விரும்பியதால் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டியிடுகிறேன். குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கூறிய காரணத்தால், அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அடிபணிய வேண்டும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்று தருவேன். தி.மு.க.வை பொறுத்தவரையிலும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதே பெரிய விஷயம். அதனால் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் யார் வேட்பாளராக வர வேண்டும் என்று தி.மு.க. சொன்னதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு எடுக்கும். அதே நேரத்தில் எங்கள் கட்சியின் மேலிடம், தி.மு.க.வை கலந்து பேசியிருப்பார்கள் என்று நம்புகிறோம். வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் மீண்டும் மக்களுக்காக, காங்கிரஸ் கட்சிக்காக, தி.மு.க. கூட்டணிக்காக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். கூட்டணி கட்சி தலைவர்களையும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும் சந்தித்துவிட்டு நான் பிரசாரத்தை தொடங்குவேன்.

வெற்றியில் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே வேட்பாளர்களை பற்றி கவலைப்படாமல் உடனடியாக நாங்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டோம். ஆனால் எதிரணியில் இருப்பவர்கள் தேர்தலில் நிற்கலாமா? வேண்டாமா? யாரை வேட்பாளராக அறிவிப்பது? என்று இன்னும் அவர்கள் முடிவு செய்யவில்லை. இதற்கு காரணம் அவர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதுதான்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சுமார் 11,000 வாக்குகள் பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற எனக்கு அவர் ஆதரவு தரவேண்டும். திமுக கூட்டணியில் அவர் சேர வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை அவரிடம் கூறினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், கமல்ஹாசனின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரஸும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். மறைந்த தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு கமலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். காங்கிரசையும், கமல்ஹாசனையும் பிரிக்க முடியாது. கமல்ஹாசன் கைகொடுப்பது மட்டுமல்ல கைக்கும் ஆதரவு தருவார் என்று நம்புகிறேன். இடைத்தேர்தலில் கமல் ஆதரவளித்தால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு தொடக்கமாக அமையும். கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 11,000 வாக்குகள் பெற்றார். கமல்ஹாசனை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. தங்களின் கட்சியினருடன் கலந்து ஆலோசித்த பின் தனது முடிவை கூறுவதாக கமல் என்னிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள், அதிமுக இரண்டாக உடைந்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த இளங்கோவன், அதிமுக இரண்டாக உடையவில்லை; நான்காக உடைந்திருக்கிறது என்றார். அதிமுகவின் நான்கு அணியினருமே பாஜகவினருக்கு ஜால்ரா தட்டுகின்றனர். நான்கு அணியினரின் ஆதரவுடன் பாஜக போட்டியிட்டாலும் வரவேற்போம் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதையடுத்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோரிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதேபோல சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு கேட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம் தொலைபேசியில் பேசி, ஆதரவு திரட்டினார்.