சென்னையில் குடியேறி வரும் வடமாநிலத்தவர்களால் நமக்கு ஆபத்து: கே.என்.நேரு

சென்னையில் தினம் தோறும் குடியேறி வரும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களால் நமக்கு தான் ஆபத்து என அமைச்சர் நேரு எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் – தொழிலகங்கள் – ரயில் நிலையங்கள் – வங்கிகள் என அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் விவசாயம், சித்தாள் போன்ற அடிமட்ட பணிகளிலும் வடமாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர். குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள், உணவகம் நடத்துபவர்கள் என பலதரப்பட்டோரும் வட மாநிலத்தவர்களை பணியமர்த்திக் கொள்கின்றனர்.
இதனிடையே வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிச் சீட்டு வேண்டும் என வேல்முருகன் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கூட இது தொடர்பாக முழு விவரத்துடன் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் கூட, தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரித்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பீகார், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வேலை வாய்ப்பு தேடி தமிழ்நாடு வருவதாகவும் சென்னையில் மட்டுமே தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் குடியேறி வருவதாகவும் தெரிவித்தார். இந்தப் போக்கு நமக்கு மிகப் பெரிய ஆபத்து என எச்சரித்த அவர், தமிழ்நாட்டில் குடியேறும் வட மாநிலத்தவர்கள் நிச்சயம் நம்மை (திமுகவை)ஆதரிக்க மாட்டார்கள் என்றும், ஆனால் அதையும் முறியடிக்க வேண்டிய பணி இருப்பதாக கூறினார்.

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தீர்மான கொண்டு வந்ததன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் என்றும், அதேபோல் தமிழ்நாடு பெயர் விவகாரத்திலும் உறுதியோடு செயல்பட்டு முதல்வர் வெற்றி பெற்றிருப்பதாக அமைச்சர் நேரு பேசினார்.