எதிர்தரப்பினரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை: கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளில் தங்கள் அணியினர் பம்பரமாக சுழன்று வேலை செய்வதாகவும், எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணப்படவே இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் ‘இந்திய ஒற்றுமை பயணத்தை’ முடித்த ராகுல்காந்தி, இந்த பயணம் குறித்து, தான் கையெழுத்திட்டு அனுப்பி இருந்த கடிதம் வாசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த கடிதத்தின் நகலை சத்தியமூர்த்தி பவனையொட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று வழங்கினார்கள். இதேபோல், அந்தந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் இந்த கடித நகலை வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து இருக்கிறது. ஒத்த கருத்துடையவர்கள் பல்வேறு மேடைகளில் இருந்தாலும், அவர்களை எல்லாம், ஒரே மேடைக்கு அழைத்து வந்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து, தமிழகத்தில் அந்த பணிகளை செய்திருக்கிறார்கள். எங்களுடைய மேடைக்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவருடைய இயக்கத்தின் ஆதரவு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. ஈரோட்டில் எங்களுடைய தோழமை கட்சிகளின் தோழர்கள் பம்பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஈரோட்டில் தேடி, தேடி பார்க்கிறோம். எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு ரொம்ப படிப்பினையை தந்திருக்கிறது என்று கருதுகிறேன். நாங்கள் களத்தில் மகத்தான வெற்றியை பெறுவோம். எங்கள் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறந்தவர். அவர் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.