திமுக அமைச்சர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் அமைச்சர் நாசர். அப்போது தனக்கு உடனே நாற்காலி எடுத்து வந்து போடாததால் தொண்டர்களை பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டு கல்லை எடுத்து அவர்கள் மீது விட்டு எறிந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி கட்சியினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து, சால்வை கொடுத்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நின்று இருந்தார். வரிசையாக திமுக தொண்டர்கள் சென்று உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்து அவருக்கு வணக்கம் வைத்து விட்டு சென்றனர். ஒரு தொண்டர் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க முயன்ற போது அமைச்சர் நேரு அவரின் தலையில் ஓங்கி அடித்து சட்டையை பிடித்து தள்ளினார். அப்போதும் ஆத்திரம் தீராமல் பின்பக்கமாக கழுத்தை பிடித்து அங்கிருந்து தள்ளினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
தினம் ஒருவரை அடிக்கிறோம் என்று திமுக அமைச்சர்கள் மக்களையும் தொண்டர்களையும் அடிப்பதாக சபதம் எடுத்தது போல் தெரிகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் கற்களை வீசி எறிந்தார். இப்போது இன்னொரு அமைச்சர் ஆவேசமாக அடித்து தள்ளுகிறார். அதனால் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.