ஒடிசா சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது உதவி சப் இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் படுகாயமடைந்தார்.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
ஒடிசா சுகாதார அமைச்சரும் மூத்த பிஜேடி தலைவருமான நபா தாஸ் பிரஜராஜ்நகரின் காந்தி சக் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது, கோபால் தாஸ் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் தனது ரிவால்வரை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், இடது பக்க மார்பில் குண்டு பாய்ந்து அமைச்சர் நிலைகுலைந்து போனார். அவரை ஆபத்தான நிலையில் அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், அமைச்சரை நோக்கி உதவி சப் இன்ஸ்பெக்டர் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதற்கான சரியான காரணம் வெளியாகவில்லை.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருந்த நாபா தாஸுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தும், துப்பாக்கி சூடு நடந்திருப்பது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.