தொழில் படிப்புகள் அனைத்தையும் தாய் மொழியில் படிக்க வைக்க, அனைத்து நூலையும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை தொடங்கி இருக்கிறோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அன்னை சத்யா நகர், துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் இன்று காலை மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெற்றது. காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டை முதலமைச்சர் முக.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்களுக்கு முன்னால், துபாயில் நடை பெற்ற உலக காது, மூக்கு, தொண்டை பேரவை கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து 10 தலைசிறந்த மருத்துவர்களுக்கு உயரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆசிய கண்டத்தில் இருந்து பன்னாட்டு விருதுக்கு தேர்வான ஒரே மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தான். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாகும். பாராட்டுக்குரியது. பொதுவாக மருத்துவ மாநாடுகளில் உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களின் பொன்மொழிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இங்கு அழைப்பிதழில் உலகப் பொதுமறையாக இருக்கக்கூடிய திருக்குறளை வெளியிட்டிருக்கிறார். திருவள்ளுவரையே காது, மூக்கு, தொண்டை டாக்டர் போல் ஆக்கி விட்டார்.
எனக்கு லேசாக தொண்டை கரகர என்று ஆகி விட்டால் உடனே மோகன் காமேசுவரனிடம் சென்று விடுவேன். காது, மூக்கு, தொண்டை அனைவருக்குமான பிரச்சினை என்பதால், தாய்மொழியில் இந்த மாநாடு நடத்தப்படுவது மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது. நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், பள்ளி, கல்லூரிகளில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோவில்களில் தமிழ், இசையில் தமிழ் என எங்கும் தமிழ் எதிலும் தமிழ். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் வழியில், தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக, முக்கியத்துவம் அளிக்கும் அரசாக நமது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்து அரசின் சார்பில் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். தொழில் படிப்புகள் அனைத்தையும் தாய் மொழியில் படிக்க வைக்க, அனைத்து நூலையும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை தொடங்கி இருக்கிறோம்.
மருத்துவம் என்பது எளிமையானதாக, புதுமையானதாக அதே நேரத்தில் செலவு இல்லாததாக அமைய வேண்டும். அது குறித்தும் இந்த மாநாடு சிந்திக்கும் என கேட்டுக் கொள்கிறேன். மருத்துவம் நவீனமாகி வருகிறது. ஆனால் அதிக தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்குகிறோம். மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் வழங்குகிறோம். மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக தருகிறோம் என்றாலும் அதிகபடியான மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் அனைத்து தேவைகளையும், சேவைகளையும், அரசு மருத்துவமனை மட்டும் வழங்கினால் அது போதாது. இதில் தனியார் பங்களிப்பும் மிக மிக முக்கியமாக இருக்கிறது. அப்படி தனியார் மருத்துவமனைகளை பங்களிக்க செய்யும்போது அதன் கட்டணம் ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும்.
கல்வியும், மருத்துவமும் சேவை துறைகள். சேவை துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சென்னைக்கே மெடிக்கல் கேபிட்டல் என்று தான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்த கூடிய வசதி எல்லாமே இங்கு உண்டு. அந்த வகையில் மருத்துவ துறையிலே தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.