காரைக்குடியில் பெரியார் சிலையை அகற்றிய 2 அதிகாரிகள் இடடமாற்றம்!

பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

காரைக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் இளங்கோவன் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி உள்ளார். அந்த வீட்டுக்கு தமிழ் இல்லம் என்று பெயர் வைத்த அவர், சொந்தமான வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையையும் இவர் அமைத்து இருக்கிறார்.தன்னுடைய வீட்டையும், பெரியார் சிலையையும் இன்று திறந்து வைப்பதற்காக திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இளங்கோவன் வீட்டிற்கு நேற்று சென்று சிலையை அகற்ற கூறி இருக்கிறார்கள். இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகளின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் பெரியார் சிலைக்கு துணியை போட்டு மூடி அதனை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு எதிராக இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்து பெரியாரின் சிலையை அகற்றி உள்ளார்கள் என்றும், தனது வீட்டிற்கும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் இளங்கோவன் தெரிவித்தார். “தனியார் இடத்தில் சிலை வைக்கலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளதை நாங்கள் காவல்துறையிடம் தெரிவித்தோம். சிலையை அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். தனிப்பட்ட முறையில் பெரியார் மீதான காழ்புணர்ச்சியால் அதிகாரிகள் இப்படி நடக்கிறார்கள். காவல்துறையில் காவிகள் ஊடுருவி இருக்கிறார்கள். காவல் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை காரைக்குடி வந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அந்த வீட்டில், “இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது” என்று எழுதப்பட்ட பேனரை திறந்து வைத்தார். இந்த இடத்தில் மீண்டும் பெரியார் சிலையை நிறுவுவோம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, “காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் #பெரியார் மண் !!!” என்று கூறி இருக்கிறார்.