கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!

சென்னை மெரினா கடலில் கலைஞரின் நினைவாக பேனா சிலை வைப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

இதையொட்டி பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 31-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் எழுப்பப்பட்டது. இதில் ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்தது. அதுமட்டுமின்றி பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்களுக்கு எதிராக சிலர் கோஷங்கள் எழுப்பி வரும் சூழலை பார்க்க முடிந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சென்னைவாசிகள் உள்ளிட்டோர் பேனா சின்னம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்தனர். மீனவ அமைப்புகளை பொறுத்தவரை சின்னம் அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், பேனா சிலையை வைக்க குறிப்பிட்ட பகுதியை கடலில் இருந்து எடுக்கிறீர்கள். அதை சமன்செய்ய மண்ணை கொட்டுவீர்கள். இதனால் அழுத்தம் வந்து பவளப் பாறைகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது அங்கிருந்த சிலர் சீமானின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

உடனே உங்களை மெரினாவில் புதைக்க விட்டதே தவறு. நீங்கள் பேனா சிலையை வையுங்கள். ஒருநாள் நான் வந்து அதை உடைக்கிறேனா, இல்லையா எனப் பாருங்கள். கடலுக்குள் தான் பேனா வைக்க வேண்டுமா? பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? ஏன் அண்ணா அறிவாலயத்தின் முன்பு வையுங்கள். இல்லையெனில் நினைவிடம் கட்டியுள்ளீர்களே அதில் வையுங்கள். இந்த சின்னத்தால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார். உடனே சீமான் வெளியேறுமாறு சிலர் கூச்சலிட்டனர். அதற்கு, நீங்கள் போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? என்று கேட்டார்.

மேலும் பேசுகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் கடலுக்குள் பேனா வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்கள் நடத்துவோம். அதை தடுத்து நிறுத்தும் வரை போராடுவோம். இது உறுதி என்று தனது பேச்சை முடித்து கொண்டு தங்கள் எதிர்ப்பு கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி விட்டு சீமான் புறப்பட்டு சென்றார்.

முதலில் பேனா நினைவு சின்னத்தின் கட்டுமானம் எப்படி இருக்கும், எந்தெந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து காணொலி வாயிலாக விரிவாக விளக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மீனவர்களின் ஒரு பகுதியினர் மற்றும் வணிக அமைப்பினர் பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதுதொடர்பாக மீனவர்கள் சார்பில், ‛‛ பேனா நினைவு சின்னம் அமைத்தால் மீன்வளம் பெருகும். பேனா நினைவிட பீடத்தில் இருக்கும் பாசிகளை மீன்கள் திண்று இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். இதனால் பேனா நினைவு சின்னம் அமைப்பது சரியானது தான்” என ஒரு தரப்பு மீனவ்ரகள் தெரிவித்தனர்.

வணிக அமைப்பினர் சார்பில், ‛‛பேனா நினைவு சின்னம் அமைத்தால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவாகும். வணிகம் பெருகும்” என பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தலைவர் இளங்கோ பேசினார். அப்போது, ‛‛இந்த திட்டத்தால் மீன்வளம் பாதிக்கும். இது சட்ட விதிகளுக்கு எதிராக அமைக்கப்படுகிறது” என தெரிவித்தார். இதை கேட்ட சில மீனவர் அமைப்பினர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேடையில் இருந்து கீழே இறக்க வேண்டும் என கண்டன கோஷமிட்டனர். இதையடுத்து சமாதானம் செய்யப்பட்டனர். மேலும் இளங்கோ பேசுகையில், ‛‛கருணாநிதியின் புகழை பேசுவதற்காக இது அமைக்கப்பட உள்ளது. அதனை ஏன் சுற்றச்சூழல் பாதிக்கப்படும் வகையில் கடலுக்குள் அமைக்க வேண்டும். இந்த சின்னத்தை கடலுக்கு நடுவே அமைப்பதை தவிர்த்து மாற்று இடத்தில் நிறுவ வேண்டும். கருணாநிதி போற்றப்படும் தலைவர் தான்” எனக்கூறினார்.

இந்த சமயத்தில் பாஜக மீனவர் பிரிவு மாநில தலைவர் எம்சி முனுசாமி தரப்பிலும் பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் மேடையில் பேசுகையில், ‛‛கருணாநிதி நினைவு பேனா சின்னத்தால் மீன்வளம் பாதிக்கப்படும். இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். கருணாநிதி திருவள்ளுவருக்கு சிலை அமைத்தர். 133 அடியில் அந்த சிலை அமைந்துள்ளது. பேனா நினைவு சின்னம் 42 மீட்டர் 137 அடியில் அமைக்கப்பட உள்ளது. வள்ளுவரை விட கருணாநிதி என்ன சிறந்தவரா?” என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கூற வந்திருந்தவர்கள் எம்சி முனுசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக கோஷமிட்டால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பேச்சை கைவிட்டு வந்தார். இதையடுத்து கூட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே பேச வேண்டும். அரசியல் சார்ந்த கருத்துகள் பேச வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டு கொாண்டனர்.