ஆந்திர பிரதேச தலைநகராக மாறியது விசாகப்பட்டினம்!

ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில் அந்த மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வரும் மார்ச் 3, 4-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டு விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014 அம் ஆண்டு பிரிகப்பட்டது. தெலுங்கானா தலைநகரமாக ஐதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு குண்டூர் – விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். அதன்படி, அமராவதியில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை அமைக்கப்பட்டு, அங்கேயே சில பேரவைக் கூட்டங்களும் நடைபெற்றன. பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தார். இதனை தெலங்கு தேசம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.

இதன் தொடர்ச்சியாக, அமராவதிதான் ஆந்திரா தலைநகரமாக இருக்க வேண்டும் எனக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஆந்திரா அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வரும் மார்ச் 3, 4-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டு விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.