தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி செய்யப்படும் மேல்முறையீடுகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படவில்லை. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான மிக முக்கிய கருவி தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகும். அந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான அமைப்பு செயல்படாமல் இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் அந்த சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே வீணாகி விட்டது. தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு ஓர் தலைமை ஆணையர், 9 ஆணையர்கள் என 10 பேரை நியமிக்க முடியும். ஆனால், இப்போது மொத்தம் 7 பேர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இது போதுமானதல்ல என்பதால், ஆணையர்களின் எண்ணிக்கையை பத்தாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.