சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று மதியம் நடைபெற்றது

சென்னையில் மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று மதியம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மகத்தான விழாவில் பங்கெடுத்து கொண்டுள்ளதை பெருமையாக கருதுகிறேன். தி.மு.க. ஆட்சியில் கொரோனாவை வென்றோம். மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகு உடனே அதிகப்படியான மழை பெய்தது வெள்ளம் ஏற்பட்டது. இதில் நமது அரசு செயல்பட்ட விதத்தை ஊடகங்களும், பொது மக்களும் பாராட்டினார்கள். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யாமல் போனதால் முதல் முறை மழை வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அனைவரும் 24 மணி நேரமும் பணியாற்றினார்கள்.

அது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள். தண்ணீர் நின்றால் 1 மணி நேரத்தில் மோட்டார் வைத்து எடுத்து அகற்றி விட்டது மாநகராட்சி. மக்களோடு மக்களாக நின்று கடமையாற்றிய அனைவரையும் பாராட்டுகிறேன். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டது காவல்துறை. எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து உழைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. பாராட்டு மழையில் நான் நனைய காரணம் மாநகராட்சி அலுவலர்களும், ஊழியர்களும் தான். எல்லார்க்கும் எல்லாம் என்பது மட்டுமல்ல திரா விட மாடல் ஆட்சி. அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவதும் தான் திராவிட மாடல் ஆட்சி.

சென்னையில் முதல் முறை மழை வெள்ளத்தை பாடமாக வைத்துக் கொண்டு செயல்பட்டோம். 5 விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் அது ஒரு கை பலம். அப்படி சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட 5 துறைகளும் சிறப்பாக பணியாற்றியது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, தலைமைச் செயலாளர் இறையண்பு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.