அமைச்சர்கள் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள்: அன்புமணி

அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், கணேசனும் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்துக்கும் பல போராட்டங்களை நடத்தியவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி என்றும் ஆனால் அவரது மகனோ நேர் எதிராக செயல்படுகிறார் எனவும் வேதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது:-

மக்களைப் பற்றியும், மண்ணைப் பற்றியும் திராவிட கட்சிகளுக்கு எந்த கவலையும், அக்கறையும் கிடையாது. விவசாயிகளுக்கே விவசாயத்தைப் பற்றிய அக்கறை கிடையாது. பணம் வந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்திருக்கிறேன். கடலூர் மாவட்டம் என்னுடைய மாவட்டம். மாவட்டங்கள் பிரிக்கப்படும் முன்பு தென்னாற்காடு மாவட்டமாக தான் இருந்தது.

என் தாய், தந்தைக்கு பிறகு என்னுடைய கடவுள் விவசாயிகள் தான். அவர்களுக்கு எங்கே பிரச்சனை இருந்தாலும், எங்க கஷ்டப்பட்டாலும் முதலில் ஓடோடி செல்பவன் இந்த அன்புமணி ராமதாஸ். கடலூர் மாவட்டத்தில் பிரச்சனை என்றாலும் சரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர் எந்த பகுதியில் விவசாயிகளுக்கு பிரச்சனை என்றாலும் முதல் முதலில் போராட்டம் செய்து, அவர்களுக்கு உரிமைகளை மீட்டு தருவது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

கடலூர் மாவட்டத்தில் இரண்டு ‘என்எல்சி’ ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அது எல்ஐசி, இது என்எல்சி. என்எல்சி-க்கு உள்ள அந்த பெரிய ஏஜென்ட்கள் ஒன்று எம் ஆர் கே பன்னீர்செல்வம், இன்னொன்று சி.வி.கணேசன். நான் நினைத்தேன் இந்த இரு அமைச்சர்கள் மாவட்டத்தை வளர்ப்பார்கள், விவசாயத்தை பாதுகாப்பார்கள், இந்த மாவட்டம் நலம் பெறும் என்று மகிழ்ச்சி கொண்டேன். ஆனால் இவர்கள் இருவரும் என்எல்சி ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்ஐசி ஏஜென்ட்க்கு கமிஷன் கிடைக்கும். என்எல்சி ஏஜென்ட்க்கு என்ன கிடைக்கும்? என்று அன்புமணி கேட்க, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கோஷமிட்டனர்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, இப்போது ஆளுங்கட்சியாக வந்த போது ஒரு நிலைப்பாடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு எம் ஆர் கே பன்னீர்செல்வம் தானே என்எல்சி நிறுவனத்தை எதிர்த்து போராடினார். இன்று நிலத்தைப் பிடிங்கிக் கொடுக்கும் ஏஜெண்டா எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்? அவங்க அப்பா முட்டம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் விவசாயத்துக்கு எத்தனை போராட்டம் நடத்தினார். அதனால் தான் கலைஞர் அவரின் மகனான பன்னீர்செல்வத்தை அமைச்சராக ஆக்கினார். அப்பா அப்படி இருக்கிறார் ஆனால் மகன் விவசாயிகளுக்கு நேர் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நிச்சயமா இந்த பகுதியில் ஒரு பிடி மண்ணை என்எல்சி நிறுவனம் எடுக்க விடமாட்டோம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.