அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும், அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும் என்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக விவகாரம் வெடித்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் நேற்றைய தினம் ஏற்பட்டது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-
ஒரு சிலரின் சுயநலத்தால், அதிமுக கட்சி இன்று மிகவும் பலவீனமடைந்துள்ளது. சுயநலத்துடன், பணபலத்துடன் சிலர் செயல்பட்டதால் தான் அதில் இருந்து வெளியேறி அமமுக கட்சியை உருவாக்கினேன். கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் வரும் தேர்தல்களில் மக்கள் வெற்றி வாய்ப்பை தருவார்கள் என நாங்கள் நம்புகிறோம். காலம் எல்லாவற்றிற்கும் தீர்வு தரும். ஈரோடு தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம். மக்கள் விரோத போக்கை செய்து வரும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் அமமுக நோக்கம்.
நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் பேனா நினைவு சின்னத்தை அறிவாலயத்தில் வைக்கலாம். ஆனால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கும் வண்ணம் கடலில் வைக்க கூடாது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும். அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும். இதை தான் ஓபிஎஸ் சொல்கிறார். ஓபிஎஸ் தேர்தலில் நிற்க வேட்பாளரை அறிவிக்கட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.