அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15 ஆம் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் ட்ரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார். தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இரண்டு முறை பதவி வகித்தவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறி வந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், “இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்” என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.