மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை: கமல்ஹாசன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் நேரடிப் பயன் திட்டம் எதுவும் இல்லை என்று மநீம தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

இதுதொடா்பாக கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகா்த்த அல்லாடும் சூழலில் இந்திய பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை. நடுத்தர வா்க்கத்துக்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் நடுத்தர மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப் போவதில்லை.

கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை. சேமிப்புக்கு பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் நிதிநிலையில் பளிச்சிடுகின்றன. வடக்குக்கு செழிப்பான, தமிழகத்துக்கு பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த நிதிநிலை அறிக்கை இது. இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.