வேங்கைவயல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதைவிட பெரியார், திராவிடர் எதிர்ப்பு தான் சீமானிடம் மேலோங்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதனை விசிக தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறியதாவது:-
உலகம் முழுவதும் ஜனநாயக சக்திகள் அனைவரும் வெட்கப்பட வேண்டியதற்கான அநாகரீகம் இது. 40 நாட்கள் கடந்துள்ள நிலையில், மக்களை சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளோம். கடந்த டிச.26ம் தேதி இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தகவல் கிடைத்த ஓரிரு நாட்களில் விசிக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். சட்டமன்றத்திலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விசிக சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும், இருப்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று முதலமைச்சர் பதில் அளித்தார். அதேபோல் வேங்கைவயல் விவகாரம் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விசிக சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, மருத்துவ முகாமை நடத்தியுள்ளோம். மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதே கண் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கிறோம். பாஜகவின் யுக்தி இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. இது குறிப்பிட்ட கிராமம் சார்ந்த பிரச்சினையல்ல. தேசம் தழுவிய பிரச்சினையாகும். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் சாதி, மதம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூர்மைப்படுத்த தலையிட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினைகள் வடஇந்திய மாநிலங்களிலும் வெளிப்படையாக சங்பரிவார்களால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இருக்கிறது. அதுதான் அரசியல் யுக்தியாக இருந்து வருகிறது. சனாதன சக்திகள் திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு காவி பூசுவது போன்ற நடவடிக்கைகளில் பாஜகவின் தலையீடு தமிழ்நாட்டில் அதிகமான பின்னரே நிகழ்கிறது. காரைக்குடியில் பெரியார் சிலையே அப்புறப்படுத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரவர்க்கத்திலும் சனாதன சக்திகள் ஊடுருவி இருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது. வேங்கைவயல் சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும். நாளை மறுநாள் விசிக சார்பில் திருவாரூரில் பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, வேங்கைவயல் விவகாரம் பற்றி திருமாவளவன் பேசக்கூடாது என்ற சீமான் கருத்து பற்றிய கேள்விக்கு, சீமானின் கருத்து திமுக மீதான காழ்ப்பை வெளிப்படுத்த கூடியதாக இருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதால், நாங்கள் அமைதி காத்திடவில்லை. இது வெறும் அரசியல் பிரச்சினை இல்லை. இது மக்களின் பிரச்சினையாக பார்க்க வேண்டும். கூட்டணிக்கு இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாவற்றிலும் வாக்கு வங்கி அரசியல் பேசக் கூடாது. குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது ஏன் என்று கேள்வி சரியானது, ஆனால் கூட்டணியில் இருக்கிறோம் என்ற கேள்வி அபத்தமானது. இந்த விவகாரம் குறித்து அதிமுக, பாஜக இதுவரை வாய்திறக்கவில்லை. பெரியார் மண் என்று பேசக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார். அவருக்கு பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீது உள்ள நிலைப்பாட்டில் பேசுகிறார். ஏனென்றால் அதுதான் சீமானின் அரசியல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட தன் அரசியல் பேசப்பட வேண்டும் என்று சீமான் நினைக்கிறார். வேங்கைவயல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதைவிட பெரியார், திராவிடர் எதிர்ப்பு தான் சீமானிடம் மேலோங்கியுள்ளது. அதனால் அவர் சொல்லுகிறார். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.