நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுடன் தன் இதயம் இருக்கும் என்றும், இருநாட்டு மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இருநாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் நர்டஹி பகுதி அருகே நேற்று அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடான சிரியாவிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஜோர்டான், லெபனானிலும் ஆகிய அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 1 நிமிடம் நீடித்த இந்த சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கினர். 2 வது முறையாக 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியின் மற்றொரு நகரில் பதிவானது. சிதைந்த கட்டிடங்கள், இறந்து கிடக்கும் உடல்கள் என துருக்கி, சிரியாவியின் நகரங்க உருக்குலைந்து உள்ளன. மூன்றாவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6 என்ற அளவில் பதிவானது.

3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி 30 முறை துருக்கியில் நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. ரிக்டரில் 4 என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் நிலையம் கூறியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக நிலநடுக்கத்தால் சேதமடைந்த, வெடிப்புகள் ஏற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்படக்கூடிய ஆப்டர் ஷாக் எனப்படும் இந்த அதிர்வுகளால் பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக மீட்புப் பணிகளில் மேலும் தொய்வு ஏற்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,350 ஐ எட்டி இருக்கிறது.
இதில் 1,541 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள். 810 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துருக்கி, சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், காயங்கள், பேரழிவுகளை கண்டு வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரு நாட்டு மக்களுடன் என் இதயம் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்” என கூறியுள்ளார்.