துருக்கியில் பலி எண்ணிக்கை 4,800 ஆக அதிகரித்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,800-ஐ கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பிப்.6-ம் தேதி அதிகாலை 7.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 4,890 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தில் 11 ஆயிரம் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை பறவைகள் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளாக இன்றும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 5.5 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொறுத்தவரை, முதலில் 7.8 ரிக்டர் அளவு கோலிலும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறை 6.0 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகிய நிலையில், பலர் கட்டிடங்களின் இடையே சிக்கி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தால், ஈராக் மற்றும் எகிப்து ;போன்ற நாடுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளும், காயங்களுடன் மீட்கப்படுபவர்களும் இன்னும் அதிகரிக்க கூடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் வீடுகளை இழந்து இருக்க இடம் இல்லாமல், உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

துருக்கி நிலநடுக்கத்திற்கு இந்தியாவில் இருந்து மீட்பு படைகளும், மருந்துகளும் அனுப்பி வைக்கப்ட்டது. மேலும், துருக்கிக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்க சம்பவத்திற்கு உலகில் உள்ள பல தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக இயற்கை பேரிடர் நடப்பதற்கு முன்பு விலங்குகளும், பறவைகளும் அதனை முன்கூட்டியே கணிக்கும் என சொல்வதுண்டு. அந்த வகையில் துருக்கியில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே அந்த நகரத்தை சுற்றி வட்டமடித்தவாறு பறவைகள் பறந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே போல, டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என வரைபடத்தில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்பதை கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தேடினால் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5.33 மணிக்கு பதிவொன்றை போட்டுள்ளார். அதில், கூடிய விரைவிலேயே அல்லது பின்னரோ 7.5 ரிக்டர் அளவுகோலில் தெற்கு – மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனானில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிப்ரவரி 4 முதல் 6ஆம் தேதிக்குள் 6 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்க பாதிப்புகள் உண்டாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

அவர் கணித்தது போலவே பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டது. இந்நிலையில் பிராங்க் ஹூகர்பீட்ஸின் பதிவு தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பிராங்க் ஹூகர்பீட்ஸ் நெதர்லாந்து நாட்டில் உள்ள SSGS எனப்படும் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வே என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்த அவர் மற்றொரு பதிவில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இத்துடன் நிற்காது. அடுத்தடுத்து பாதிப்புகள் உண்டாகும் என எச்சரித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.