3 மாதங்களுக்கு ஒருமுறை சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒரு போட்டியாக கருதவில்லை என்று திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கேஎஸ்தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் களத்தில் இருக்கிறார்கள். ஆளுங்கட்சி என்பதால் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் தீவிர பணியாற்றி வருகின்றனர். அதேபோல் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை நிலைநிறுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் தனித்து களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக ஆகியோர் தங்களை மக்கள் மத்தியில் நிரூபிக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெருத் தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-

கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கிறது. சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக என அனைத்து கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியாற்றி வருகிறோம். சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். அதேபோல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தெரு தெருவாக வாக்கு சேகரித்து வருகிறோம். என் மகன் மறைந்தது மக்கள் மத்தியில் அனுதாபம் இருக்கிறது. ஏனென்றால் திருமகன் ஈவெரா ஏராளமானவற்றை செய்திருக்கிறார். அவர் விட்டுச்சென்ற பணிகளை மேற்கொள்ள நான் களத்தில் இருக்கிறேன். நான் போட்டியிட வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பம்.

தேமுதிக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியை போட்டியாகவே கருதவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அதிமுகவை கூட போட்டியாக கருதவில்லை. அதற்கு காரணம், 2 ஆண்டுகால ஆட்சியில் திமுக ஆட்சியின் சாதனை தான். மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இரட்டை இலையின் தாக்கம் எங்கும் கிடையாது. மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்திக்கும். மக்கள் மத்தியில் உதயசூரியன், கை சின்னத்தை மக்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர், சீமான் விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு, 3 மாதங்களுக்கு ஒருமுறை சீமான் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். திடீரென பெரியாரை புகழ்வார். அதேபோல் பெரியாரை விமர்சனம் செய்வார். இப்படி மாறிமாறி பேசுபவர். சீமான் மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. ஆனால் ஒரு நிலையற்றத்தன்மையில் சீமான் பேசுவதால், அவரது விமர்சனத்தை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை என்று தெரிவித்தார்.