அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் மறியல்!

கட்டிட பணியில் குறைந்த சம்பளம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கிவிட்டு தங்களை கட்டுமான நிறுவனங்கள் ஒதுக்குவதாக கூறி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக வட இந்தியர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது. கட்டுமானத் தொழில், உணவகங்கள், சலூன் கடைகள், நெசவு தொழில் தொடங்கி விவசாயம் வரை பல்வேறு தொழில்களில் வட இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பீகார், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், வட கிழக்கு மாநிலங்கள் என சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது. தங்கள் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நல்ல ஊதியம் வழங்கப்படுவதாக கூறி இங்கு வேலைக்கு வருகிறார்கள் வட இந்திய தொழிலாளர்கள். இவர்களின் வருகையால் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களை விட வட இந்திய தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் அவர்களை முதலாளிகள் பணியமர்த்துகின்றனர். கொத்தனார், சித்தாள், மம்பட்டியாள், பெயிண்டர், ஆசாரி என கட்டிடம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் வட மாநிலத்தவர்களையே கட்டுமான நிறுவனங்கள் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் வட மாநில தொழிலாளர்களை கட்டுமான வேலையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிராம்பட்டினத்தில் உள்ளூர் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்டுமான பணிகளில் வட மாநிலத்தவர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதால் தங்களுக்கு வேலை கிடைக்காமல் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி நேற்று காலை அதிராம்பட்டினத்தின் முக்கிய பேருந்து நிறுத்தமான சேர்மன் வாடி அருகே பெண்கள் உட்படநூற்றுக்கணக்கான கட்டிட தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது வட மாநிலத் தொழிலாளர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மறியலை கலைத்தனர். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் கட்டிட தொழிலாளர்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.