அண்ணா நாமம் எனில் அண்ணா கொள்கைக்கே நாமம்: கி.வீரமணி

அண்ணா திமுக என்ற பெயரை எழுதவே கை கூசுவதாகவும், அண்ணா நாமம் என்றாலே அண்ணாவின் கொள்கைக்கே நாமம் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டியதுள்ளது எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வரும் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் இதுவரை 80 பேர் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கால அவகாசம் இன்று மாலையோடு முடிவதால், இந்த எண்ணிக்கை குறையக் கூடும் என்றாலும், தேர்தல் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கும், இ.பி.எஸ். அணிக்கும் இடையிலான போட்டியாகத்தான் அமையும். அண்ணா தி.மு.க. என்று எழுதக் கைகூசுகிறது; ஏனெனில், அண்ணா கொள்கைக்கும், இவர்களுக்கும் ஒட்டும் இல்லை – உறவும் இல்லை. அண்ணா நாமம் என்று அவர்கள் சொல்லுவது எல்லாம் – அண்ணா கொள்கைக்கு நாமம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள வேலை கிட்டா இளைஞர்களுக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி செய்த துரோகம் சாதாரணமானதல்ல. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்நாட்டையும் கடந்து இந்தியாவில் உள்ள வெளி மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கதவை அகலமாகத் திறந்துவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அல்லவா! தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழுக்குத் தனித் தாள் தேர்வு வைத்து, குறைந்த பட்சம் 40 மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளதே! இவையெல்லாம் 18 வயதில் வாக்குரிமை பெற்ற இளைஞர்களுக்குத் தெரியாமல் போகுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஊறுகாய் ஜாடியில் போட்டு விஷம வேடிக்கை காட்டும் ஆளுநரை எதிர்த்து ஒரு குரல் கொடுத்ததுண்டா அ.தி.மு.க.? சனாதனத்தை கடுமையாக எதிர்த்தவர் அறிஞர் அண்ணா! ‘ஆரிய மாயை, ஏ தாழ்ந்த தமிழகமே, புராண மதங்கள், தீ பரவட்டும்’ என்றெல்லாம் ஆரியத் தையும், சனாதனத்தையும் எதிர்த்து எழுத்துக் கருத்தோவியம் தீட்டியவர் அறிஞர் அண்ணா. திராவிட இயக்கத்தில் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் நேர் எதிரான பி.ஜே.பி. ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட்டால், நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று இவ்வளவுக் கேவலமாகவா போக வேண்டும் மூன்று முறை இடைக்கால முதலமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம்?.

பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன? ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். கோஷ்டிகளை மோதவிட்டு, இடையில் இரத்தம் குடிக்கும் வேலையைத்தானே பி.ஜே.பி. செய்துகொண்டு இருக்கிறது! இரண்டு கோஷ்டிகளையும் கபளீகரம் செய்துவிட்டு, தமிழ்நாட்டில் தி.மு.க.வையடுத்து இரண்டாம் இடத்துக்கு எப்படியாவது வந்துவிடவேண்டும் என்பதுதான் பி.ஜே.பி.யின் ‘அந்தரங்க அஜெண்டா’ என்பதைப் பாமர மக்களும் சர்வ சாதாரணமாக உணர்ந்து விட்டார்களே – பொது இடங்களிலும் பேசி வருகிறார்களே! வைதீக மொழியில் ஒன்று சொல்லுவார்கள் ‘மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்’ என்று; அப்படித்தான் இ.பி.எஸ். அணி மண்மூடிப் போகவேண்டும் என்று ஒ.பி.எஸ். கோஷ்டியும், ஒ.பி.எஸ். அணி அடியோடு அழியவேண்டும் என்று இ.பி.எஸ். அணியும் நினைக்கின்றன என்றால், அந்த நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்று எச்சரிக்கின்றோம்.

ஈரோடு இடைத்தேர்தலில் இ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் பி.ஜே.பி.யின் எண்ணமெல்லாம், பெரிய வித்தியாசத்தில் இ.பி.எஸ். வேட்பாளர் தோற்கவேண்டும் என்பதுதான். இப்படி இந்த இரு கோஷ்டிகளும் இணைந்து விட்டன என்ற ஒரு பொதுப் பிம்பத்தை உருவாக்கினால்தான், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளின் கண்கள் தன்மீது பாயும் என்ற நரித்தனம் பி.ஜே.பி.க்கு! ‘குரங்கு அப்பம் பிரித்த கதை’யாக ஆகிவிடும் அல்லவா! தி.மு.க.வின் சாதனைகளை எண்ணிப் பாரீர்! தி.மு.க.வைப் பொறுத்தவரை அதன் நிலை என்ன? தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயமான சடங்காச்சாரமாக இருந்த நிலை போய், அதனைத் தேர்தல் கதாநாயகனாக மாற்றிய சாதனைக்குரிய பெருமை தி.மு.க.வையே சாரும். 22 மாத ‘திராவிட மாடல்’ அரசில், நடந்த சாதனைகளைப் பட்டியலிட்டால், மிகப்பெரிய மலைப்பாகத் தோன்றும்.

காங்கிரஸ் வேட்பாளர் அரசியலில் நிறைந்த அனுபவமும், முதிர்ச்சியும் நிறைந்தவர். சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசில் அமைச்சராகவும் இருந்த அனுபவக் களஞ்சியம் அவர். இவரைவிட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது. ராகுல் காந்தியின் குமரிமுதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணம் இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. குறிப்பாக பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைமையையும், ஆளும் பிரதமர் உள்பட அமைச்சர்களின் வயிற்றிலும் புளியை கரைத்துவிட்டது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் அதானியின் அபார பொருளாதார வளர்ச்சியையும், சறுக்கலையும் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பியவை வெறும் கேள்விகள் அல்ல – ”அணுகுண்டுகள்!” மறுநாள் பிரதமர் மோடி அவற்றுக்கெல்லாம் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் பெரும் ஏமாற்றம்தான்! பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது போல, ஆடியது எல்லாம் தப்பாட்டம்தான். ராகுலின் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் அளிக்க முடியாமல் மூச்சுத் திணறும் நிலைக்குப் பிரதமரைத் தள்ளி, நாட்டு மக்கள் மத்தியில் பேருரு எடுத்துவிட்டார் ராகுல் காந்தி. வடபுலங்களிலும் பி.ஜே.பி. எதிர்ப்பு அலை பீறிட்டுக் கிளம்பிவிட்டது. எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற நிலைதான் பி.ஜே.பி.,க்கு இன்று.

இத்தகு சூழலில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் பெறும் வெற்றி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. ‘ஒரே நாடு’ என்றும், ‘ஒரே மதம்’ என்றும், ‘ஒரே கலாச்சாரம்’ என்றும், ‘ஒரே மொழி’ என்றும் நாட்டை நாசகார பாசிசத்தின் படுகுழிக்கு இழுத்துச் செல்லும் பி.ஜே.பி.யிடமிருந்து நாட்டை மீட்க, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும் – 2024 இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில்! அதற்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது ஒரு தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். அந்த வகையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் பெருமை தந்தை பெரியார் பிறந்த ‘திராவிட மண்’ணுக்கானதாகவே இருக்கட்டும்! கூட்டணி கட்சிகளும் சரி, கட்சிக்கு அப்பாற்பட்ட வர்களும் சரி இந்தத் தேர்தல் மிக முக்கியமானது – நமக்கு இருக்கும் கடமை என்பது எதிர்காலத்தின் நம்பிக்கை என்னும் ஒளியைப் பாய்ச்சுவதாக அமையவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களே மறவாதீர்! மறவாதீர்!! வாக்களிப்பீர் கை சின்னத்திற்கே! அது இக்காலச் சூழலில் நாட்டு மக்களுக்குக் கைகொடுக்கக் கூடியதாகும்! இவ்வாறு கி.வீரமணி கூறினார்.