உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பிராமணர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், தந்தை பெரியார்தான் நீதிமன்றத்தையே கேள்விக்குள்ளாக்கியவர். ‘ஹிந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகளைவிட ‘விடுதலை’ நாளிதழில் தந்தை பெரியார்தான் நீதிமன்றத்தைக் கண்டித்தார். ஜாதி மறுப்பு, மத மறுப்பாளராக மட்டுமல்லாமல், சமத்துவ, வாழ்வியல் கோட்பாடுகளை அளித்தவர் தந்தை பெரியார். அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலானாலும், சமூகநீதிக்கான போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்காக திராவிடர் கழகம் நடத்துகின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கடைசி தொண்டனாக நானும் கலந்துகொள்கிறேன் என்றார்.
தொல்.திருமாவளவன் எம்.பி பேசுகையில், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றுபடாமல் தனித்தனி ஜாதிகளாக சிதறிக்கிடக்க வேண்டும் என்று செய்து வருகிறார்கள். இந்துக்கள் பெயரால் ஜாதியின் பெயரால் பிளவுபடுத்துகிறார்கள். இந்தியா முழுவதும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி என அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் பாஜகவில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
சமூக அநீதிக் கொடியை இறக்கி சமூக நீதிக் கொடியை ஏற்றுவதற்குத்தான் இந்தப் போராட்டம். அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் சமூகநீதியைத்தான் முதலில் வலியுறுத்துகிறது. அது வெறும் அறிவுரையாக இல்லாமல் கட்டளையாக உள்ளது. அதனை மீறுகிறார்கள் என்பதற்குத்தான் இந்தப் போராட்டம். இந்த போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 1928இல் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் இடஒதுக்கீடு இருந்தது.
3 விழுக்காடு உள்ள பிராமணர்களுக்கு 16 விழுக்காடு 5 மடங்காக தரப்பட்டது. மனுவே போடாத ஓர் அம்மையாரின் வழக்கில் முறைப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வகுப்புரிமைக்கு எதிராக அன்றைய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதனாலேயே முதல் சட்டத்திருத்தம் 15(4) தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தால்தான் உருவானது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதற்கும் வகுப்புரிமை கிடைத்தது. சமூகநீதியில் தமிழ்நாடு மாநிலம்தான் முன்னோடியாக உள்ளது.
இந்தப் போராட்டம் முடிவல்ல. ஒரு தொடக்கம்தான். வெற்றி கிட்டும் வரை போராடுவோம். இவ்வாறு கி.வீரமணி பேசினார்.